யோக பங்கமா/பலமா?

ஜ்யதுர்காவின் கருணையினாலே…

நம்மிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறது, அந்த யோகம் இருக்கிறது என ஜோதிஷர்களாகிய நாம் கூறுவதுண்டு. மனோரீதியாக பார்த்தால் இந்த வார்த்தைகள் ஜாதகருக்கு நல்ல திடசிந்தனையையும், நம்பிக்கையையும் கொடுக்கும் என்பது உண்மையாகத்தான் இருக்கிறது. எனினும் ஜாதகருடைய பலத்தினை ஜோதிஷர்களாகிய நாம் அறியவேண்டியதும் அவசியமாகிறது.
யோகம் என்ற வார்த்தைக்கு இணைவு என்று பொருள். ஜோதிஷ நூல்களில் பல்வேறுவிதமான யோகங்களை பற்றி கூறியுள்ளனர். சத யோகம், யோக மஞ்சரி போன்ற நூல்கள் யோகத்தினை மட்டும் பேசக்கூடிய நூல்களாகும். அடியேன் அறிந்தவரை மொத்தமாக 1500 யோகங்கள் பல்வேறு நூல்களில் கூறப்பட்டுள்ளன. பராசரா லைட் எனும் ஆங்கில ஜோதிஷ சாஃப்ட்வேர் 1000 யோகங்களை உள்ளடக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குரு சந்திர இணைவதால் ஏற்படும் பலனை மணிகண்ட கேரளத்தின் பாடலோடு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி குருவும் சந்திரனும் எந்த பாவத்தில் இணைந்தாலும் அந்த பாவ காரஹத்திற்கு தீங்கு விளைவிப்பதாக பாடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் பொதுவாக குரு சந்திரன் இணைவிற்கு மற்ற நூல்களில் நன்மையும் தீமையும் கலந்தே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ஹ ஹோராவில் 12 பாவங்களில் எந்த பாவத்தில் குரு சந்திரன் இணைந்தாலும் ஏற்படும் பலன் பற்றி கூறியுள்ளார்கள். அதன் கருத்தின்படி அந்தந்த பாவம் பற்றிய நல்ல பலனும் தீய பலனும் சேர்ந்தே கூறப்பட்டுள்ளன.

எனவே மணிகண்ட கேரளத்தில் கூறியவற்றை சரியாக புரிந்துகொள்ள நாம் அதனை ஆராய வேண்டியது அவசியமாகிறது.

குரு சந்திரனுடன் இணைவது குருசந்திர யோகம்.
குருவுக்கு 4,7,10ல் சந்திரன் வருவது கஜகேசரி.
குரு சந்திரனுடன் வருடத்திற்கு 13 முறை இணையும். அதில் 6 முறை வளர்பிறையாக இருக்கும்.

இதனைபோலவெ கஜகேசரிக்கும் பார்த்தோமானால் வருடத்திற்கு 40 முறை கஜகேசரி யோக அமைப்பு உண்டாகும். அதில் சந்திரன் 19 முறை வளர்பிறையாக இருப்பார்.
வெறும் இணைவு மட்டும் நற்பலனையும், தீய பலனையும் தீர்மாணிப்பதில்லை. நல்ல தீய பலன்களை தீர்மாணிக்கும் பல்வேறு காரணிகளை அறிய வேண்டியது ஜோதிஷிக்கு அவசியமாக உள்ளது.

மணிகண்ட கேரளத்தின் கருத்தானது சரியாக இருக்க வேண்டுமெனில் என்னென்ன காரணிகள்/ அமைப்புகள் இருக்கவேண்டும் என்பதனை என்னுடைய அனுபவப்படி தருகிறேன். குரு சந்திரன் இணைவு கீழ்கண்ட அமைப்புடன் ஒத்துவந்தால் அது இணைந்த பாவத்திற்கு தீமை தருவதாக அமையும். அவை

1.திதி சூன்ய ராசிகளில் குரு, சந்திரன் சேர்க்கை அமைவது
2. சந்திரன் தேய்பிறையாக இருந்து குருவுடன் இணைவது
3.லக்கின விழுந்த நக்ஷத்திரத்திற்கு 3,5,7வது நக்ஷத்திரத்தில் குரு, சந்திரன் இணைவது
4.இணைவுபெற்ற குரு,சந்திரனுடன் ராகு, சனியின் தொடர்பு
5.நவாம்சத்தில் குரு, சந்திரன் நீசம்/பகை அடைவது
6.குருவைவிட சந்திரன் அதிக பாகையில் இருப்பது
7.லக்கினத்திற்கு 6,8,12ல் குரு, சந்திரன் இணைவது
8.ராசியில் முதல் 3 பாகை அல்லது கடைசி 3 பாகையில் குரு, சந்திரன் இணைவது
9.இணைவுபெற்ற குரு,சந்திரன் மிருத்தியு பாகையில் இருப்பது
10.குரு அல்லது சந்திரனில் ஒருவர் 22வது திரேக்காணாதிபதியாகவோ, 64வது நவாம்ச அதிபதியாகவோ வருவது
11.குருவும் சந்திரனும் விகல (நொண்டி), கள (தீங்கு விளை), கோப (கோபம்) அவஸ்தையில் இருப்பது
12.சந்திரனுடைய பின்னாஷ்டவர்கத்தில் சந்திரன், குரு இணைந்த ராசி 2 பிந்து
வாங்கியிருத்தல்
13.குருவும் சந்திரனும் அவ நாமயோகத்தில் இருப்பது அல்லது ஏதேனும் ஒருகிரஹம் அவயோகியாய் இருப்பது
14.ராக்ஷச நக்ஷத்திரத்தில் குரு, சந்திரன் சேர்க்கை அமைவது
15.ஜாதகர் ரிஷப, மிதுன, கன்னி, துலாம், மகரம், கும்பம் லக்கினத்தில் பிறப்பது
இது குரு சந்திர யோகத்திற்கு மட்டும் அல்ல அத்தனை யோகத்திற்கும் இது பொருந்தக்கூடியதாகும்.

குரு சந்திரன் யோகம் நன்மையை தரவேண்டுமானால் என்னென்ன காரணிகள்/அமைப்புகள் இருக்கவேண்டுமென காண்போம்.

1.லக்கினத்திற்கு 1,4,5,10 பாவத்தில் குரு, சந்திரன் சேர்க்கை அமைவது
2. சந்திரன் வளர்பிறையாக இருந்து குருவுடன் இணைவது
3.லக்கின விழுந்த நக்ஷத்திரத்திற்கு 2,4,6,8,9வது நக்ஷத்திரத்தில் குரு, சந்திரன் இணைவது
4.இணைவுபெற்ற குரு,சந்திரனுடன் வேறுகிரஹ தொடர்பு இல்லாமல் இருப்பது
5.நவாம்சத்தில் குரு, சந்திரன் உட்சம்/ஆட்சி அடைவது
6.சந்திரனைவிட குரு அதிக பாகையில் இருப்பது
7.குரு, சந்திரன் இவற்றில் ஒருவரோ அல்லது இருவருமோ வர்கோத்தமம் அடைவது.
8.ராசியில் 6பாகை முதல் 24 பாகைக்குள் குரு, சந்திரன் இணைவது
9.இணைவுபெற்ற குரு,சந்திரன் புஷ்கராம்ச பாகை, நவாம்சத்தில் இருப்பது
10.குரு அல்லது சந்திரனில் ஒருவர் ஆத்மகாரஹனாகவோ அல்லது அமத்யாகாரஹனாகவோ இருப்பது
11.குருவும் சந்திரனும் தீப்த (பிரகாசித்தல்), ஸ்வஸ்த(ஆறுதல் தருதல்),பிரமுடித (சந்தோஷம்) அவஸ்தையில் இருப்பது
12.சந்திரனுடைய பின்னாஷ்டவர்கத்தில் சந்திரன், குரு இணைந்த ராசி 5 க்கு மேற்பட்ட பிந்து வாங்கியிருத்தல்
13.குருவும் சந்திரனும் சுப நித்திய நாமயோகத்தில் இருப்பது அல்லது ஏதேனும் ஒருகிரஹம் யோகிகிரஹமாய் இருப்பது
14.தேவ கண நக்ஷத்திரத்தில் குரு, சந்திரன் சேர்க்கை அமைவது
15.ஜாதகர் மேஷ, கடக, விருச்சிக, தனுசு, மீன லக்கினத்தில் பிறந்திருப்பது

இது குரு சந்திரன் இணைவுக்கு மட்டும் அல்ல. அத்தனையோகத்திற்கும் இதனைப்போலவே மற்ற காரணிகள்/ அமைப்பினையும் பார்த்தால் யோகங்களின் உண்மையான பலம் என்ன என்பதனை அறியலாம் என்பது அடியேனுடைய கருத்தாகும்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)