Welcome to TalkAstro.com

இந்த இணைய தளத்தில் ஜோதிஷம் தொடர்பான புதுபுது விஷயங்கள் மற்றும் பக்கங்கள் வெளியிடப்படும். ஆகையால் தாங்கள்  தொடர்ந்து இந்த வலைதளத்திற்கு வருகை புரிந்தால் ஜோதிஷம் தொடர்பான அறிவை வளர்த்துக்கொள்ளலாம். ஜோதிஷம் பற்றி ஓரளவு தெரிந்தவர்கள் கூட ஜோதிஷத்தை நன்கு புரிந்து கொண்டு உபயோகப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

Patteeswaram Durgai ammam

ஜ்ய துர்காவின் அருளால் அவள் தம் பாதம் பணிந்து, ஜோதிஷ மகரிஷியான பராசரரை வணங்கி இவ்வலைதளத்தின் மூலம் தமிழில் ஜோதிஷத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்லும் இந்த முயற்சியை துவங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கோயிலில் பூஜை செய்யும் பாரம்பரியமிக்க அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்து ஜோதிஷத்தில் முதுகலை பட்டம் பெற்று தற்போது ஜோதிஷத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நான், ஜோதிஷத்தில் மிக ஆர்வம் கொண்டு சுமார் 15 வருடமாக இதனை பயின்றும், பிறருக்கு பயிற்றுவித்தும் வருகிறேன்.ஜோதிஷத்தை அனைவருக்கும் கொண்டு சென்று அதனை அவர்கள் புரிந்து கொண்டு உபயோகிக்கும் படியாக செய்வதே எனது நோக்கமாகும்.

மகரிஷிகளான ப்ருகு, கர்கர், பராசரர் போன்றவர்களின் கருத்துக்களையும்,  அவர்களின் கருத்துக்களை பின் தொடர்ந்து  வந்த ஜோதிஷ ஞானிகளான வராஹமிகிரர், கல்யானவர்மர், மந்த்ரேஷ்வரர், வெங்கடேஷ்வர் மற்றும் பற்பல ஜோதிட அறிஞர்கள் அருளிய கருத்துக்களில்  எனக்கு தெரிந்த, நான் கேள்விப்பட்ட, நான் கற்றுக்கொண்ட, நான் பயன் படுத்திய ஜோதிட விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் மக்களிடம் எடுத்துச்செல்லவும் இந்த வலைதளம் உதவுமென நம்புகிறேன்.

இவ்வலை தளத்தில் ஜோதிஷ பாடத்தின் அடிப்படையிலிருந்து தொடங்கி பலனுரைக்கும் வரை அனைத்து பகுதிகளும்  அனைவரும் புரிந்துகொள்ளும் படியாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.

நாம் காணும் அண்டத்தில் பல கோடி நக்ஷத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நக்ஷத்திரமும் சூரியனை போன்றது. நமது பூமி, சூரிய என்கிற நக்ஷத்திரத்தை சுற்றி வரும் ஒரு கோள் ஆகும்.  பல கிரஹங்கள் சூரியனை சுற்றி வந்தாலும் பூமிக்கு மிக அருகில் அல்லது இருபுறத்திலும் சூரியனை சுற்றி வரும் கோள்களான சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி கோள்களை கொண்டே ஜோதிஷ பலன் தீர்மானிக்கப்படுகிறது.   இக்கோள்களில் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் புதன், சுக்கிரனும், பூமியின் துணைக்கோளாக சந்திரனும், சூரியனிடமிருந்து பூமியைவிட தொலைவில் செவ்வாய், குரு, சனி கோள்கள் உள்ளன. ராகு, கேது என்பது சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் வருவதால் ஏற்படும் இரு நிழல்கள் ஆகும்.

அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் உள்ளது என நமது முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். நாம் பிண்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் அண்டத்தை ஆராய வேண்டும், அதேபோல அண்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் பிண்டத்தை ஆராய வேண்டும். பிண்டமான இத்தேகத்தை தியானம் மூலம் சமாதி நிலைக்கு கொண்டு சென்று தெய்வத்தின்  அருளாலும், தனது சக்தியாலும்  பூமியை சுற்றி உள்ள கிரஹங்களின் ஓட்டங்கள், பூமியின் மீதான அவற்றின் தாக்குதல் போன்றவற்றை மஹரிஷிகள்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே நமக்கு ஏடுகள் வாயிலாக சரியாகவும், நுட்பமாகவும் தெரியபடுத்தி சென்றுள்ளனர். சூரியன், சந்திரன் நேர்கோட்டிற்கு வரும் அமாவாசை, பெளர்ணமி போன்றவற்றினை நவீன விஞ்ஞானத்தையும் விட மிகவும் சிறப்பாக கணித்துள்ளனர்.  பிண்டமாகிய தேகத்தினால் மகரிஷிகள் அண்டத்தின் சூட்சுமங்களையும் ரகசியங்களையும் கண்டறிந்ததினால் அதனை பயன்படுத்தி பிண்டங்களுக்கு ஏற்படும் அதாவது மனித குலத்திற்கு ஏற்படும் சுக, துக்கங்களை நம்மால்,  அண்டத்தை ஜோதிஷ முறைப்படி ஆராய்வதால் அறிய முடிகிறது. மஹரிஷிகள் நமக்கு அருளிய  ஜோதிஷ சூட்சுமங்களை இந்த இணைய தளத்தில் மூலமாக பிறருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஜோதிஷமும் மருத்துவமும் கடல் போன்றது. இதில் யாரும் முழுமையடைவதில்லை. நாம் தெரிந்து கொண்டது சொற்ப அளவே ஆகும். இந்த இணையதளத்தினை நீங்கள் ஒரு தகவல் தளமாகவே உபயோகிக்க வேண்டுகிறேன். சிலருக்கு சில மருந்துகள் ஒவ்வாமல் போகலாம். அதைபோலவே நடை முறை வாழ்வில் இந்த இணையத்தின் தகவல்கள் ஒரு சிலருக்கு பொருந்தாமல் போக வாய்ப்புகள் உள்ளது. ஆகையால் இங்குள்ள தகவல்களை ஒரு ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கவும். தினசரி வாழ்விலோ அல்லது முழுமையான ஜோதிஷ கல்வி கற்றுக்கொள்ளாமலோ பரிட்சித்து பார்க்கவேண்டாம் என்று வேண்டி கொள்கிறேன்.

இந்த இணையதளம் தனி மனித முயற்சி என்பதால் பல ஜோதிட குறிப்புகளை பல நூல்களில் வாயிலாகவும், ஏடுகள் வாயிலாகவும் நான் கற்ற, பரிஷித்த ஜோதிஷ குறிப்புகள் மற்றும் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வாசகர்களின் கருத்தறியும் கல்வி கண்ணோட்டத்தில் இங்கு பகிர்ந்து கொள்ளப்படுகிறது. எனது நோக்கம், பலவித ஜோதிட குறிப்புகள் புத்தக வடிவில் இருப்பதாலும், பல அற்புத குறிப்புகள் நம்மை விட்டு காணாமல் போகிவிடுமோ என்ற அச்ச மிகுதியாலும் இதனை மின்னாக்கம் செய்ய முனைந்துள்ளேன். இவ்வலைதளத்தின் ஜோதிடக்குறிப்புகளை படித்து தங்களுடைய மேலான கருத்துக்களை பதியவேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.